

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி களில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இவ்வழக்கு உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது முஸ்லிம் மாணவி கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், “மாணவிகள் ஹிஜாப் அணிவதால் யாருக்கும் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை. பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் மக்களின் மத நம்பிக்கையிலும், தனிப்பட்ட உரிமையிலும் அரசு தலையிட முடியாது.
அரசியலமைப்பு சட்டத்தின் 25-ம் பிரிவின்படி ஒருவர் தனது மத நம்பிக்கைகளை பின்பற்று வதற்கு முழு உரிமை இருக்கிறது.
நான் பள்ளிக்கு செல்லும்போது ருத்ராட்சை அணிந்து சென்றேன். எனது மத நம்பிக்கை என்பதால் யாரும் அதை தடுக்கவில்லை. இப்போதும் கூட நீதிபதிகள் ருத்ராட்சை அணிகிறார்கள். தங்கள் மத நம்பிக்கையின்படி நீதிபதிகள் இதை அணி கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவில் தென் னிந்திய இந்து பெண் ஒருவர் வகுப்பில் மூக்குத்தி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாணவியின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு, அவருக்கு மூக்குத்தி அணிய அனுமதி வழங்கப்பட்டது.
தலைப்பாகைக்கு அனுமதி
அதேபோல கனடா நீதிமன்றம் சீக்கியர் தலைப்பாகை அணிந்து வகுப்பில் கல்வி கற்க அனுமதி அளித்துள்ளது. இதைப் போல ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்க வேண்டும். உயர் நீதி மன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என வாதிட்டார்.
இதனை கேட்டறிந்த நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.