

மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரில் உள்ள சிங்னபூர் சனிபகவான் ஆலயத்துக்குள் பெண்கள் நுழைய கோயில் அறங்காவல் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
சனி கோயிலின் கருவறைக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததை அடுத்து கோயில் அறக்கட்டளையை எதிர்த்தும், மகாராஷ்டிர அரசை எதிர்த்தும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. தடையை நீக்க வலியுறுத்தி மும்பை நீதிமன்றங்களில் ஏராளமான பொதுநல மனுக்கள் குவிந்தன.
சுமார் 25 ஆண்டுகளாக பெண்கள் நுழைய தடை இருந்து வந்த நிலையில் கருவறை நுழைவுப் போராட்டங்களும் நடந்தன. அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளை கிளப்பி நீதிமன்றம் வரை விவகாரம் உச்சம் பெற்றது.
இதனையடுத்து கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கோயில் நிர்வாகம் தற்போது பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட துருப்தி தேசாய் கூறும்போது, இதே வழிமுறையை கோலாப்பூர், நாஷிக் கோயில்களும் கடைபிடிப்பதே நல்லது என்றார்.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றம், கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது என்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகும் அரசு இதனை செய்தாக வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இதனையடுத்து கோயில் நிர்வாகிகள் இன்று கூட்டம் கூட்டி ஆலோசனை செய்து பெண்கள் நுழைவதற்கு அனுமதி அளித்து தடையை நீக்கியதாக அறிவித்தனர்.