Published : 01 Feb 2022 06:36 AM
Last Updated : 01 Feb 2022 06:36 AM
புதுடெல்லி: ‘‘உத்தர பிரதேசத்தில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். ஆனால், பழிவாங்கும் அரசியலில் சமாஜ்வாதி ஈடுபடுகிறது’’ என்று பிரதமர் மோடி காணொலி மூலம் முதல் முறையாக பிரச்சாரம் செய்தார்.
உ.பி.யின் மிக முக்கியமான மேற்குப் பகுதிகளில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் நேற்று காணொலி காட்சி மூலம் முதல் முறையாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். உ.பி.யின் ஷாம்லி, முசாபர்நகர், பக்பத், சகாரன்பூர், கவுதம புத்தர் நகர் ஆகிய பகுதி வாக்காளர்களிடம் பிரதமர் பேசியதாவது:
உ.பி.யில் மாற்றத்தை கொண்டு வர நாங்கள் முயற்சிக்கிறோம். முதல்வர் ஆதித்யநாத் எடுத்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சியினர் முதலை கண்ணீர் வடிக்கின்றனர். இந்தத் தேர்தல் போலி சமாஜ்வாதி கட்சிக்கும் ஏழைகளுக்கான அரசுக்கும் இடையே நடக்கிறது.
உ.பி.யில் பாஜக ஆட்சியில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்காக பல்வேறு கொள்கை முடிவு கள் எடுக்கப் பட்டுள்ளன. மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. எக்ஸ் பிரஸ் சாலைகள் மூலம் உ.பி.யின் பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பெண்களின் நலனுக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தினந்தோறும் இரவு கடவுள் கிருஷ்ணர் தம் கனவில் வருவதாகவும், தான்தான் உ.பி.யில் ஆட்சி அமைக்கப் போவதாகவும் கூறுவதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் கூறி வருகிறார். தற்போது சிலர் கனவு காண்கின்றனர். தூங்குபவர்களுக்குதான் கனவு வரும்.
கடந்த ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்ததால், நொய்டா, கிரேட்டர் நொய்டா பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியவர்களுக்கு இன்னும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அங்கு வீடுகள் வாங்கிய ஆயிரக்கணக்கான ஏழை, நடுத்தர மக்கள் துன்பம் அனுபவித்து வருகின்றனர். ஆனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்தப் பகுதிகளில் கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களை கட்டி முடிக்க சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.
அரசியல் பழிவாங்க மக்களை தூண்டி வரும் சமாஜ்வாதி கட்சி யார் யாருக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்கி உள்ளது என்பதை பாருங்கள். அதை பார்த்தாலே மக்கள் புரிந்து கொள்ள முடியும். வன்முறையாளர்கள், கிரிமினல்கள் எல்லாம், தங்களுக்கு சாதகமாக அரசு அமைய வேண்டும் என்று நினைக்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆட்சியில் ஏழை களுக்கான ரேஷன் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. தற் போது ஒவ்வொரு தானியமும் ஏழைகளின் குடும்பங்களை சென்று சேர்கிறது. கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இதுபோன்ற பல நல்ல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT