ஆபரேஷன் சமந்தா: 'சமத்துவம் நோக்கிய நகர்வு' - போலீஸார் புடை சூழ குதிரையில் ஊர்வலம் வந்த மணமகன்

ஆபரேஷன் சமந்தா: 'சமத்துவம் நோக்கிய நகர்வு' - போலீஸார் புடை சூழ குதிரையில் ஊர்வலம் வந்த மணமகன்
Updated on
1 min read

பண்டி: மணமகன் ஊர்வலத்தை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து ஏற்பாடு செய்து, அதற்கு 'ஆபரேஷன் சமந்தா' என்று பெயரிட்டு வெற்றிகரமாக நடத்தியும் உள்ளது. ராஜஸ்தானில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

திருமண ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு என்றால் விஐபி வீட்டுத் திருமணமோ என்ற கேள்வி எழலாம். ஆனால், அப்படி இல்லை என்பதுதான் பதில். ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் சாடி கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் திருமணத்தில், அவர் குதிரையில் ஊர்வலம் வர ஏதுவாகவே காவல்துறை இத்தனை பாதுகாப்பையும் செய்து கொடுத்துள்ளது. இதன் பின்புலத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

மணமகன் பெயர் ஸ்ரீராம் மேக்வால். மணமகள் பெயர் த்ரோபதி. மணமகன் சாடி கிராமப் பஞ்சாயத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவர்களது திருமணத்தின்போது மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., போலீஸ் படை என பெருங்கூட்டமே இருந்தது.

எதற்காக ஆபரேஷன் சமந்தா? - பண்டி மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் ஜெய் யாதவ். ஆபரேஷன் சமந்தா குறித்து அவர் கூறுகையில், "ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின மக்கள் மீதான அடக்குமுறை உள்ளது. அதுவும் குறிப்பாக திருமண வைபவங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த மணமகன் குதிரையில் ஊர்வலம் வர அனுமதியில்லை. மீறி குதிரை ஊர்வலம் நடத்தினால் அவர்கள் வன்முறைக்கு உள்ளாகின்றனர். இதனால்தான் ஆபரேஷன் சமந்தாவை துவக்கினோம். சமந்தா என்றால் சமநிலை என்று அர்த்தம். சமத்துவத்தை ஏற்படுத்தவே இந்தத் திட்டத்தை துவக்கினோம்.

இதற்காக கணக்கெடுத்து, பண்டி மாவட்டத்தில் பட்டியலின மக்கள் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கு எங்கள் சமந்தா குழுவினரை அனுப்பினோம். அவர்கள், பட்டியலின மக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகளை எடுத்து விளக்கிவருகின்றனர். அந்த முயற்சியின் அடிப்படையிலேயே நாங்கள் ஸ்ரீராம் மேக்வாலை அணுகினோம். அவருடைய திருமணத்தை குதிரை ஊர்வலத்துடன் நடத்த முழு பாதுகாப்பு வழங்கப்படும் எனக் கூறினோம். அதை செய்தும் முடித்துள்ளோம்" என்றார்.

மேலும், "இனியும் திருமணங்களில் குதிரை ஊர்வலம் நடைபெறும். அதை தடுக்கவோ, சீர்குலைக்கவோ முயன்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.

ஸ்ரீராம் மேக்வால் அளித்தப் பேட்டியில், "எங்கள் ஊரில் குதிரை ஊர்வலம் சென்று திருமணம் செய்த முதல் மணமகன் நான்தான். இதனால் எங்கள் மீதான மக்களின் பார்வை மாறும். பட்டியலினத்தவர் என்றால் கீழ்நிலையில்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மாறும். சமத்துவத்தை நோக்கி இது ஒரு சின்ன அடி" என்று கூறினார்.

பட்டியலின மணமகன்கள் குதிரையில் ஊர்வலம் வருவது அதுவும் குறிப்பாக பெண் குதிரையில் ஊர்வலம் வருவது பண்டியில் இத்தனை காலமாக சாத்தியமற்றதாக இருந்தது. இந்தத் திருமணத்தில் பாதுகாப்பு வழங்க 3 காவல்நிலையங்களில் இருந்து 60 போலீஸார் வந்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in