

புதுடெல்லி: ஹரித்துவார் மாநாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், வன்முறைகளை தூண்டும் வகையிலும் வெறுப்புப் பேச்சில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து உத்தராகண்ட் மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய், வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி (முஸ்லிம் மதத்தில் இருந்து கடந்த மாதம் இந்து மதத்துக்கு மாறியவர்.) மற்றும் இந்து தலைவர்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பேசிய இந்து மத ஆதரவாளர்கள், சிறுபான்மையினருக்கு எதிராகவும், வன்முறைகளை தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் பத்திரிக்கையாளர் ஒருவர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு விவகாரம் குறித்து விசாரிக்க சுதந்திரமான சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்க வேண்டும் எனவும், அலிகாரில் வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ள இதே போன்றதொரு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தர்ம சன்சத்’ மாநாட்டின் வெறுப்புப் பேச்சு விவகாரம் குறித்து உத்தராகண்ட் மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், அலிகாரில் நடைபெறவுள்ள கூட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மனுதாரர்கள் அணுக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
முன்னதாக, இந்தப் பொதுநல வழக்குகளை விசாரணைக்கு எடுக்க கோரி திங்கள்கிழமையன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.