

புதுடெல்லி: கரோனா தொற்றின் தாக்கம் இன்னும் 3 மாதங்களில் குறையத் தொடங்கும் என்று மத்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிக்குழுவின் தலைவரும் மருத்துவ நிபுணருமான என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கடந்த 5 வாரங்களாக உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுபோல கரோனா தொற்றும் வேகமாக பரவுகிறது.
ஆனாலும், இதன் பாதிப்புகுறைவாக உள்ளது. பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமலோ அல்லது லேசான அறிகுறியோ உள்ளது. தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோர் 1 முதல் 2 சதவீதமாக உள்ளது. கரோனா 2-வது அலையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.59 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.9 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கரோனா தொற்று வேகமாகப் பரவுவதைப் பார்த்தால் இது 3-வது அலையின் அடையாளமாகத் தெரிகிறது. இன்னும் வேகமாக கரோனா தொற்று பரவும். ஆனால், அதிகரிக்கும் வேகத்தில் குறையும். இன்னும் 3 மாதங்களில் கரோனா தொற்று குறையும். இவ்வாறு என்.கே. அரோரா கூறினார்.
ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் ஜெனரல் சமிரன் பாண்டா கூறுகையில், ‘‘இப்போது எந்தப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகிறதோ அங்கெல்லாம் இன்னும் 3 மாதங்களுக்குள் கரேனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கும். பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை’’ என்றார்.