மத்திய பிரதேச வர்த்தகரிடம் ரூ.8 கோடி ரொக்கம் பறிமுதல்: தண்ணீர் டேங்கில் ரூ.1 கோடி மீட்பு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் வர்த்தகரின் வீட்டில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தி ரூ.8 கோடியை பறிமுதல் செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தைச் சேர்ந்த வர்த்தகர் சங்கர் ராய். இவர் கருப்புப் பணம் வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார் வந்தது. அதன்பேரில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை சங்கர் ராய் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் தரைக்கு அடியில் தண்ணீர் டேங்கில் ஒரு பையில் போட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்தக் காட்சியை அதிகாரிகள் வீடியோ எடுத்துள்ளனர்.
மேலும், அந்த வீடியோவில் தண்ணீரில் நனைந்த ரூபாய் நோட்டுக்களை அதிகாரிகள் காயவைக்கின்றனர்.
இந்தப் பணம் உட்பட ரூ.8 கோடி கணக்கில் வராத கருப்புப் பணம், ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 39 மணி நேரம் சோதனை நடைபெற்றதாகவும் ஜபல்பூர் வருமான வரித்துறை இணை ஆணையர் முன்முன் சர்மா தெரிவித்தார்.
மொத்தம் 36 பேருந்துகளை தொழிலாளர்களின் பெயரில் சங்கர் ராய் குடும்பத்தினர் இயக்கி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. சங்கர் ராயின் சொத்துக்கள் தொடர்பாக மேற்கொண்டு தகவல் தெரிவிப்போருக்கு வருமான வரித்துறை ரூ.10 ஆயிரம் பரிசு அறிவித்துள்ளது.
சங்கர் ராய் ஏற்கெனவே காங்கிரஸ் ஆதரவுடன் தமோ நகராட்சித் தலைவராகவும் அவரது சகோதரர் கமல் ராய் பாஜக ஆதரவுடன் தமோ நகராட்சித் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளனர்.
