

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த ஒரே ஆண்டில் சுமார் 31 ஆயிரம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30,864 புகார்கள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இது, கடந்த 2020-ம் ஆண்டை காட்டிலும் 30 சதவீதம் அதிகமாகும்.
மொத்த புகார்களில் 11,013 புகார்கள், பெண்களை உணர்வுபூர்வமாக துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்பானவை. பெண்களுக்கு எதிரான வன் முறை தொடர்பாக 6.633 புகார் களும், வரதட்சணை கொடுமை தொடர்பாக 4,589 புகார்களும் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட புகார்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரபிரசேதத்தில் இருந்து பெறப்பட்டவை. அம்மாநிலத்தில் இருந்து 15,828 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அடுத்தபடி யாக டெல்லியில் இருந்து 3,336, மகாராஷ்டிராவில் இருந்து 1,504 புகார்களும், ஹரியாணாவில் இருந்து 1,460 புகார்களும், பிகாரில் இருந்து 1,456 புகார்களும் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறும்போது, “பெண்களுக்கு எதிரான குற்றங் கள் தொடர்பான புகார்கள் தற்போது அதிக அளவில் பெறப் படுகின்றன. தேசிய பெண்கள் ஆணையத்தின் பணிகள் குறித்து மக்கள் மத்தியில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது” என்றார்.-பிடிஐ