

நான்கு ஆண்டு பி.டெக். படிப்பு களை நடத்த டெல்லி பல்கலைக் கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 64 கல்லூரிகளில் நான்கு ஆண்டு படிப்புகளை ரத்து செய்யும்படி யுஜிசி பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கல்லூரிகளில் உள்ள 54 ஆயிரம் இடங்களுக்கு 2.78 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துவிட்டு காத்துக் கிடந்தனர். இறுதியில் நான்கு ஆண்டு படிப்புகளை ரத்து செய்ய டெல்லி பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டதன் பேரில், இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.
எனினும், பி.டெக். மற்றும் நிர்வாகவியல் படிப்பான பிஎம்எஸ் நான்கு ஆண்டு படிப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக இருந்தது. இவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுஜிசி-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை டெல்லி போலீஸார் அப்புறப்படுத்தினர்.
இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் யுஜிசி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
டெல்லி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்த 4 ஆண்டு படிப்புகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பி.டெக். மாணவர்கள் தங்கள் நிலை குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த விவகாரம் கடந்த 23-ம் தேதி நடந்த நிலைக்குழு கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டது.
கடந்த 2013-14 கல்வியாண்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட் ரானிக்ஸ், உணவு தொழில்நுட்பம், இன்ஸ்ட்ருமென்டேஷன் எலெக்ட் ரானிக்ஸ், பாலிமர் சயின்ஸ் ஆகிய துறைகளில் உள்ள பி.டெக். படிப்புகளை யுஜிசி சட்ட விதி, பிரிவு 22-ன் படி தொடரலாம்.
இப்படிப்புகளுக்கு யுஜிசி அல்லது ஏஐசிடிஇ அமைப்பிடம் உரிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.