கர்நாடக பேரவையில் மதமாற்ற தடை மசோதா: முதல்வர் பொம்மை முடிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு

கர்நாடக பேரவையில் மதமாற்ற தடை மசோதா: முதல்வர் பொம்மை முடிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு
Updated on
1 min read

கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த முதல்வர் பசவராஜ் முடிவெடுத்துள்ளார். இதற்கு காங்கிரஸ்கட்சியும் கிறிஸ்தவ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் இந்துக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதையடுத்து கட்டாய மதமாற்றம் குறித்த தகவல்களை சேகரிக்க மாவ‌ட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். மேலும் வட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை ஆய்வுசெய்து, புதிய சட்டத்தை உருவாக்குமாறு சட்ட நிபுணர்களுக்கு உத்தரவிட்டார்.

இதற்கு கிறிஸ்தவ அமைப்பினரும் ஆயர் கூட்டமைப்பும் கடும்எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சட்டத்தால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றும் அரசியலமைப்பு சாசனம் வழங்கிய உரிமையை பறிப்பதாக உள்ளதாகவும் கூறி பெங்களூருவில் கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்கூறும்போது, "கர்நாடகாவை ஆளும் பாஜக, சிறுபான்மையினரை குறிவைத்து கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதன் மூலம்கிறிஸ்தவர்களை ஒடுக்க அரசுமுடிவெடுத்துள்ளது. இதனாலேகடந்த சில மாதங்களாக பஜ்ரங்தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கிறிஸ்தவர்களை தாக்கி வருகின்றனர். இந்த சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. எக்காரணம் கொண்டும் இதை அமல்படுத்த விட மாட்டோம்'' என்றார்.

பைபிள் எரிப்பு

கர்நாடகாவில் உள்ள கோலாரில் கிறிஸ்தவ அமைப்பினர் சிலர் வீடு வீடாக சென்று மக்களுக்கு இலவசமாக பைபிளை கொடுத்துள்ளனர். இதையறிந்த இந்துத்துவா அமைப்பினர் அந்த பைபிள்களை வாங்கி ஒரே இடத்தில் போட்டு தீயிட்டு கொளுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த கோலார் போலீஸார் சம்பவம் இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in