

வரலாற்றுரீதியான முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்தபின் நீதிபதிகள் அமர்வில் இருந்த அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம், சீன உணவுகள் சாப்பிட்டோம், ஒயின் அருந்தினோம் என தனது அனுபவங்களை முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், அயோத்தி வழக்கில் தீர்ப்பு, சபரிமலை தீர்ப்பு மறுஆய்வுமனு, ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு, ரஃபேல் வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக கோகய் உள்ளார்.
தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஞ்சன் கோகய், தன்னுடைய “ ஜஸ்டிஸ் ஃபார் ஜட்ஜ்” என்ற தலைப்பில் சுயசரிதை நூல் எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீ்ட்டுநிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடந்தது.
அதில் ரஞ்சன் கோகய் அயோத்தி வழக்கில் தீர்ப்புக் குறித்து கூறுகையில் “ அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியபின், தீர்ப்பளித்த நீதிபதிகள் குழுவை புகைப்படம் எடுக்க செகரட்டரி ஜெனரல் அழைத்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்ற முதல் அறைக்கு அருகே இருக்கும் அசோக சக்கரத்துக்கு அருகே நின்று புகைப்படம்எடுத்தோம்.
அன்று மாலை தீர்ப்பளித்த நீதிபதிகள் குழுவில் இருந்த அனைவருக்கும் நான் தாஜ் மான்சிங் ஹோட்டலில் விருந்தளித்தேன். சீன உணவுகள், ஒயின், ஆகியவற்றை நாங்கள் அருந்தினோம்”எனத் தெரிவித்தார்.
கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா செயல்பாட்டுக்கு எதிராக நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும், நீதிமன்றத்துக்கு இருக்கும் நெருக்கடிகளையும் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த நீதிபதிகள் குழுவில் நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகய், மதன்பி லோகூர், குரியன் ஜோஸப் ஆகியோர் இருந்தனர். அந்த சந்திப்புக் குறித்து ரஞ்சன் கோகய் தனது நூலில் குறிப்பிடுகையில், “ 2018, ஜனவரி 12ம் தேதி வெள்ளிக்கிழமை. எனக்கு சில வேலைகள் இருந்தது, நண்பகல் 12 மணிக்கு வேலையை முடித்துவிட்டு நீதிபதி செலமேஸ்வர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு நான் பார்த்த காட்சிகள் எனக்கு அதிர்ச்சியளித்தன.
பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். ஏராளமான கேமிராக்கள் வைக்கப்பட்டு இருந்தன. நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சேனல்களின் ஓ.பி. வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதை நான் எதிர்பார்க்கவி்ல்லை. பத்திரிகையாளர்களைச் சந்திக்கலாம் வாருங்கள் என்று என்னை அழைத்தபோதுதான் நான் செலமேஸ்வர் ஏற்பாடு செய்தது எனத் தெரிந்தேன். எப்படியும் வெளியே செல்ல முடியாது எனத் தெரிந்தது. ஆதலால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்க வேண்டியநிலை ஏற்பட்டது. இது அசாதாரணமான சம்பவமாக இருந்தாலும், சூழலின் அடிப்படையில் அன்று நான்எடுத்த முடிவு சரி என இன்று வரை நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.