போதை வழக்கில் மென்மை காட்ட கூடாது: பாகிஸ்தானியர் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

போதை வழக்கில் மென்மை காட்ட கூடாது: பாகிஸ்தானியர் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

‘‘போதை கடத்தல் சமூகத்துக்கு ஆபத்தானது. இந்த வழக்கில் தண்டனை பெற்றவரிடம் நீதிமன்றங்கள் மென்மையாக நடந்து கொள்ள கூடாது’’ என்று கூறி பாகிஸ்தானை சேர்ந்தவரின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஹித் என்பவருக்கு, 4 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக அமிர்தசரஸ் நீதிமன்றம் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. முன்னதாக இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்த போதே, 750 கிராம் ஹெராயின் கடத்திய அதே குற்றத்துக்காக 2002-ம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து, 2 வழக்குகளில் 12 ஆண்டு, 15 ஆண்டு என தனித்தனியாக விதிக்கப்பட்ட சிறை தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாஹித் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து ஜாஹித் மனுவை தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

போதைப் பொருள் இந்த சமூகத்தில் மிகப்பெரிய பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இளைஞர்களை சீரழிக்கிறது. போதைக் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்றவர்களிடம் நீதிமன்றங்கள் மென்மையாக நடந்து கொள்ள கூடாது. வேறு வேறு போதைக் கடத்தல் வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளி, தண்டனை காலத்தை ஒரே நேரத்தில் அனுபவிக்க அனுமதி கோர முடியாது.

மேலும், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்படி 2 தண் டனை காலத்தை ஒன்றாக அனுபவிப்பதா தனித்தனியாக அனுபவிப்பதா என்பது சம்பந்தப்பட்ட நீதி மன்றங்களின் அதிகாரத்துக்கு உட் பட்டது. எனினும், இரு வேறுவழக்குகளில் தனித் தனி தீர்ப்பு என்று வரும்போது, பிரிவு 427-ன்படி ஒரு தண்டனை காலம் முடிந்த பிறகு மற்றொரு தண்டனை காலத்தை தொடர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in