

அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி நிறுவனத்தின் பிரபலமான சிப்ஸ்களில் ‘லேஸ்' வகை மிகவும் பிரபலமானது. இந்த வகை சிப்ஸ்களைத் தயாரிக்க எப்எல்-2027 என்ற வகை உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை உருளைக் கிழங்கை பயிரிடுவதற்கான காப்புரிமையை பெப்சி நிறுவனம் வைத்திருந்தது.
இந்த வகை உருளைக்கிழங்கை நிறுவனத்திடம் ஒப்பந்தம் பெற்ற விவசாயிகள் தவிர வேறு எவரும் பயிரிடக்கூடாது. அவ்விதம் பயிரிடுவது தெரிந்தால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் வடக்கு பிராந்தியத்தில் 2009-ம் ஆண்டு எப்எல்-2027 ரக உருளைக்கிழங்கு அறிமுகம் செய்யப்பட்டது. இப்பிராந்தியத்தில் உள்ள 12 ஆயிரம் விவசாயிகளுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி இந்த ரக உருளைக் கிழங்கை இவர்கள் பயிரிட்டு பெப்சி நிறுவனத்துக்கு மட்டுமே அளிக்க வேண்டும். 2016-ம் ஆண்டுஇந்த ரக உருளைக்கான காப்புரிமையை பயிர் வகை பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமை ஆணையம் (பிபிவி மற்றும் எப்ஆர்ஏ) அமைப்பிடம் பெப்சி நிறுவனம் பெற்றது.
இதனிடையே இந்த ரக உருளைக்கிழங்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யாத விவசாயிகள் 4 பேர் மீது நிறுவனம் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. மிகவும் சிறிய விவசாயிகளான அவர்கள் மீது ரூ. 4.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் போராட்டம் வெடித்தது. அந்த ஆண்டு மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்ததால், இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணுமாறு பெப்சி நிறுவனத்தை அரசு வலியுறுத்தியது. இதையடுத்து 2019-ம் ஆண்டு மே மாதம் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் மெசர்ஸ் குருகாந்தி நிறுவனம் பெப்சி நிறுவனத்துக்கு அளித்த காப்புரிமையை திரும்பப் பெறுமாறு வழக்கு தொடர்ந்தது. பொது நலன் கருதியும், விவசாயிகளின் உரிமையைக் கருத்தில் கொண்டும் இதற்கு வழங்கப்பட்ட காப்புரிமையை ரத்து செய்வதாக பிபிவி மற்றும் எப்ஆர்ஏ இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் இது குறித்துகருத்து எதையும் பெப்சி நிறுவனம் தெரிவிக்கவில்லை.