Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM
உத்தரப் பிரதேசத்தின் அமேதிதொகுதியில் கோர்வா எனுமிடத்தில் அமைந்துள்ள அரசு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையில், நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது.
இங்கு அதிக திறன் மிக்க 5 லட்சம் துப்பாக்கிகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இந்தியாவின் சுயசார்பு கொள்கையின் வெளிப்பாடாக அமையும் என்றும்அரசு வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்கின்றன. அதிலிருந்து இப்போது அடுத்த கட்டமாக நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது. 7.62 மி.மீ. அளவிலான துப்பாக்கி தோட்டாக்களை வெளிப்படுத்தும் வகையில் அதிக திறன்மிக்கதாகவும், குறைந்த அளவாக5.56 மி.மீ. சுற்றளவைக் கொண்டவையாகவும் இவை விளங்குகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாகபயன்படுத்தப்பட்டு வரும் ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக இவை இடம்பெறும். 300 மீட்டர் தொலைவு வரை எதிரிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். இந்த அளவானது மூன்று கால்பந்து மைதானத்துக்கு இணையான தூரமாகும். குறைவான எடை, மிகச் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டதாகவும் இது அமையும்.
புதிய ரக துப்பாக்கி வடிவமைப்பில் நவீன தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் தேடுதல் வேட்டையின்போது ராணுவத்தினர் பயன்படுத்த மிகவும் ஏற்றது என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT