

2011-ம் ஆண்டு வருமான வரி கணக்கை சமர்ப்பித்த 6.57 லட்சம் பேர்களின் வேளாண்மை வருவாய் ரூ.2,000 லட்சம் கோடி என்று தகவலுரிமை சட்டத்தின் கீழ் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.டி.ஐ. மனு ஒன்றிற்கு வருமான வரித்துறையினர் பதில் அளிக்கும் போது, 6.57 லட்சம் தனிநபர்கள் 2011-ம் ஆண்டு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 20 மடங்கு அதிகம் சம்பாதித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற இந்திய வருவாய்த்துறை அதிகாரி விஜய் சர்மா என்பவர் வருமான வரித்துறையினரிடம் தகவலுரிமை சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை எழுப்ப அதற்கு வருமான வரித்துறை பதில் அளிக்கையில் 2011-ம் ஆண்டு வருமான வரி கணக்குகளை சமர்ப்பித்த சுமார் 6.57 லட்சம் பேர்களின் மொத்த வேளாண் வருவாய் ரூ.2,000 லட்சம் கோடி என்று கூறியுள்ளது. இது 2011-ம் ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 20 மடங்கு அதிகம் என்றும் வருமான வரித்துறை தனது பதிலில் தெரிவித்துள்ளது.
வேளாண்மை வருவாய் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த 2,000 லட்சம் கோடி வேளாண் வருவாய் கணக்கு உயர் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஏன் அதிர்ச்சி என்றால், கணக்கில் வராது சம்பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான வருவாய்கள் வேளாண்மையின் மூலம் வந்த வருவாய் என்று கணக்குக் காட்டப்பட்டு, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று ஐயம் எழுப்பி ஆர்.டி.ஐ மனு செய்த விஜய் சர்மா தற்போது பாட்னா உயர் நீதிமன்றத்தில் இது குறித்து தீவிர விசாரணை கோரி மனு செய்துள்ளார்.
இது குறித்து விஜய் சர்மா தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும் போது, “ஒன்று வரியை ஏய்க்க இந்தக் கணக்கு காட்டப்பட்டிருக்கலாம் அல்லது மற்றொரு சாத்தியம் என்னவெனில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணம், அல்லது கருப்புப் பணம் பெரிய அளவில் வெள்ளைப் பணமாக மாற்றப்பட இந்த வேளாண் வருவாய் பிரிவு பயன்படுத்தப்படுகிறதா? இது குறித்து தீவிரமான விசாரணை தேவை.
நான் இது குறித்து வருமான வரித்துறையினரிடமிருந்து தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்த போது அவர்கள் இந்த ரூ.2,000 லட்சம் கோடி வருவாய் விஷயத்தை பதிலாக அளித்தனர். அப்போது முதல் நேரடி வருவாய் வாரியத்திற்கு விசாரணை நடத்துமாறு நான் தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இன்று வரை இந்த எண்ணிக்கையை எந்த ஏஜென்சியும் மறுக்கவில்லை, கடந்த செவ்வாயன்றும், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ராஜ்யசபாவில் இந்த எண்ணிக்கையை மறுக்கவில்லை” என்றார்.
அருண் ஜேட்லி இது பற்றி அன்று தெரிவிக்கும் போது, பல முக்கியஸ்தர்கள் வருமான வரியை ஏய்க்க தங்கள் வருவாயின் பெரும்பகுதிகளை வேளாண் வருவாயாகக் கணக்கு காட்டி வருகின்றனர். வருமான வரி அதிகாரிகள் இது பற்றி விசாரித்து வருகின்றனர். பெயர்கள் வெளியாகும் போது, ‘அரசியல் பழிவாங்குதல்’என்று கூறிவிடாதீர்கள் என்றார்.
வேளாண்மை வருவாய் இந்த அளவுக்குக் காட்டப்பட்டிருப்பது முழுதும் அதிர்ச்சிகரமானது, வரி ஏய்ப்புதான் இதன் பிரதான குறிக்கோளாகும் என்று கொள்கை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ராஜீவ் குமார் என்பவர் கூறுகிறார்.