

டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசால் மூச்சு விடமுடியவில்லை. இதற்கு டெல்லி அரசு மக்களுக்கு இழப்பீடும், மருத்துவக் காப்பீடும் வழங்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை வழக்கறிஞர் ஷிவம் பாண்டே தாக்கல் செய்துள்ளார், இந்த மனு வரும் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் காற்று மாசு நிலவுகிறது. ஹரியானா, பஞ்சாப், உ.பி. மேற்குப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதாலும், வாகனங்களின் கடும் புகை, கட்டிடப்பணிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் காற்று மாசு மோசமாக இருந்து வருகிறது.
டெல்லியில் காற்றுமாசு மிகமோசமான நிலையில்தான் தொடர்்ந்து இருக்கிறது. இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையும், தேவைபட்டால் லாக்டவுன் கொண்டுவரவும் தயாராக இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், விரைவில் காற்று மாசுக்கு தீர்வுகாணக் கோரி டெல்லி அரசுக்கும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவில் மனுதாரர் கூறியிருப்பாவது:
பல்வேறு நோய்களுக்கும் காற்றுமாசுதான் மூலக் காரணம், மனிதர்களின் உடல்நலனை வெகுவாகப் பாதிக்கிறது. குறிப்பாக காற்றுமாசு மனித உடல்நிலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தலைவலி, கண் எரிச்சல், தோல் எரிச்சல்,நுரையீரல் நோய்கள் போன்றவற்றை காற்றுமாசுதான் ஏற்படுத்துகிறது. நுரையீரலில் ஏற்படும் பலநோய்களுக்கு காற்று மாசு முக்கியக் காரணமாகி பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.
பிஹார் அரசுக்கும், சுபாஷ் குமார் என்பவருக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், “ அரசியலமைப்புச்சட்டம் பிரிவு21ன்படி, மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான சூழல் இருப்பது அடிப்படை உரிமை என்றும் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுபோன்று டெல்லியில் நிலவும் காற்று மாசால் மக்கள் பெரிதும் துன்பப்படுகிறார்கள். இதற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கிட டெல்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் “ எனத் தெரிவித்துள்ளார்