பிரதமர் மோடி விவசாயிகள் மீது கருணை காட்டுபவர் அல்ல; வாக்குகளைத் தேடுபவர்தான்: பிரியங்கா காந்தி சாடல்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி | கோப்புப் படம்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி | கோப்புப் படம்.
Updated on
1 min read

பிரதமர் மோடி ஒன்றும் விவசாயிகள் மீது கருணை காட்டுபவர் அல்ல, வாக்குகளைத் தேடுபவர்தான் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடினார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய தீவிரப் போராட்டம் காரணமாக அந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய முதல் நாள் அமர்விலேயே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, எந்தவிதமான விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் சாடியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரைத் தியாகம் செய்தனர். அவர்களின் தியாகம் குறித்து ஒரு வார்த்தை கூட நாடாளுமன்றத்தில் பேசப்படவில்லை. அவர்களுக்கு மரியாதையும் செய்யப்படவில்லை.

எண்ணிக்கையில் அடங்காத ஏராளமான விவசாயிகளின் போராட்டம், தியாகம்தான் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது. அரசியலமைப்பு உரிமையைப் பெற்றோம். எந்தவிதமான விவாதமும் இன்றி வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, லக்கிம்பூர் கொலைக்கு நீதி தேவை.

பிரதமர் மோடிஜியின் வார்த்தைகள் எல்லாம் கானல் நீர். நீங்கள் விவசாயிகள் மீது கருணை காட்டுபவர் அல்ல. வாக்குகளுக்காக அனுபதாபத்தைத் தேடுபவர்”.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in