

கர்நாடகாவில் அதிகாரி ஒருவர் தண்ணீர் குழாயில் பதுக்கி வைத்திருத்த ரூ.6 லட்சம் பணத்தை ஊழல் தடுப்பு பிரிவினர் பக்கெட்டுகளில் பிடித்து பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் லஞ்சம் மூலமாக கோடிக்கணக்கில் சொத்துகள் குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து 15 அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. 30 கண்காணிப்பாளர்கள் தலைமையில் 400 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
கதக் மாவட்டத்தில் வேளாண் துறை இணை ஆணையர் ருத்ரேஷ்அப்பார் வீட்டில் ரூ.3.6 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ. 15 லட்சம்ரொக்கமும் சிக்கியது. மேலும் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களும் சிக்கின. தொட்டபள்ளாப்பூர் வருவாய் ஆய்வாளர் லட்சுமி நரசிம்மா வீட்டில் 4.8 கிலோ தங்கமும், 16 கிலோ வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் குல்பர்காவில் பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் சாந்தனு கவுடாவின் வீட்டில் நடந்த சோதனையில் 3 கிலோ தங்கமும், சுமார் ரூ.20கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களும் சிக்கின. அவரதுவீட்டின் மாடியில் சோதனை நடத்தியபோது ஓடுகளுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல வீட்டுக்கு பின்னால் இருந்த தண்ணீர் குழாயில் ரூ.6 லட்சம் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை அதிகாரிகள் நீளமான குச்சியில் குத்தி, பக்கெட்டுகளில் பணத்தை பிடித்து பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.