

வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் உயிரிழந்த 700 முதல் 750 விவசாயிகளுக்கு தெலங்கானா அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மத்திய அரசு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கிட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கடந்த வாரத்திலிருந்து மத்திய அ ரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். தெலங்கானா மாநிலத்தில் விளைந்த நெல்லையும், தானியங்களையும் மத்திய அரசு கொள்முதல் செய்ய மறுக்கிறது என குற்றச்சாட்டு கூறி வருகிறார். இதுதொடர்பாக போராட்டமும் நடத்தப்படும் எனவும் முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்த 700 முதல் 750 விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக தெலங்கானா அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். மத்திய அரசும்விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கிட வேண்டும்.
விவசாயிகளின் வெற்றிகரமான போராட்டத்தால்தான் வேறு வழியின்றி பிரதமர் மோடி இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெற்றுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அவற்றை திரும்பப் பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல பெங்களூரைச் சேர்ந்த செயல்பாட்டாளர் திஷா மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுகிறோம் என முடிவு எடுத்தபின், தொடர்ந்து விவசாயிகளை துன்புறுத்துவதும், வழக்குககளை நடத்துவதிலும் அர்த்தமில்லை. விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், உதவும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
இந்த சட்டத்தைக் கொண்டுவர வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் டிஆர்எஸ் எம்.பி.க்கள் குரல்கொடுப்பார்கள். விவசாயிகள் அதிகபட்ச ஆதரவு விலை கேட்கவில்லை, குறைந்தபட்சம்தான் கேட்கிறார்கள்.
சுயசார்பு இந்தியா என்று நாம் பேசும்போது, சுயசார்பு வேளாண்மைப் பற்றியும் பேசுவது இந்த தேசத்தில் அவசிமானது. ஏனென்றால் மக்கள் தொகை அதிகமுள்ள நாடு இந்தியா. 140 கோடியை மக்கள் தொகை நெருங்கிவிட்டது. வேளாண்மையில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால், எந்த தேசமும் நமக்கு உணவளிக்கும் தகுதியில்லை. ஆதலால் வேளாண் துறைைய சுயச்சார்பு அடைவதற்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
தெலங்கானா அரசு விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் இலவசமாக மின்சாரம் வழங்குகிறது. ஆனால், விவசாயிகளிடம் மின்கட்டணம் பெறக்கோரி மத்தியஅ ரசு நெருக்கடி அளிக்கிறது. இல்லாவிட்டால் நிதியுதவியை நிறுத்துவேன் என சர்வாதிகார மனப்போக்குடன் மத்திய அரசு மிரட்டுகிறது.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.