விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்காதீர்கள்: பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப் படம்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப் படம்.
Updated on
2 min read

விவசாயிகள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், லக்கிம்பூர் கலவரத்தில் தொடர்புடைய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் டிஜிபிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயிகள் மீது ஜீப் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கலவரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மீதும் குற்றம் சாட்டப்பட்டநிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்தும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் மாநிலக் காவல் டிஜிபிக்கள் மாநாடு நடக்கிறது. இதில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் மிஸ்ராவுடன் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஊடகத்தினர் முன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை வாசித்துக் காண்பித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு உரையாற்றியபோது, விவசாயிகளின் நலனை மனதில் வைத்து, உண்மையான மனதுடன், சிந்தனையுடன், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றீர்கள். நீங்கள் செய்தது உண்மையானதென்றால், லக்கிம்பூர் கெரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டியதும் உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

ஆனால், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா இன்னும் அமைச்சரவையில் இருக்கிறார். ஆனால், அவர் மகனோ லக்கிம்பூர் கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் தந்தையான அமைச்சர் மிஸ்ராவுடன் நீங்கள் காவல் டிஜிபி மாநாட்டில் நீங்கள் பங்கேற்றால், நீங்கள் விவசாயிகளுடன் இல்லை, விவசாயிகள் கொலைக்குக் காரணமானவர்களுடன்தான் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.

விவசாயிகள் நலன் பற்றி உங்களின் நோக்கம் தெளிவாக இருந்தால், முதலில் மிஸ்ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவருடன் சேர்ந்து கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது. நீங்கள் இந்த தேசத்தின் பிரதமர், இந்த தேசத்தின் விவசாயிகளைப் பற்றிக் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இது உங்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

லக்கிம்பூர் கெரி கலவரத்தின்போது, நமக்கு அன்னத்தை வழங்கும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடூரத்தை இந்த தேசமே பார்த்தது. மத்திய அமைச்சர் மகன் செய்த காரியம் உங்களுக்குத் தெரியும். விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றியதும் நீங்கள் அறிவீர்கள். அரசியல் அழுத்தம் காரணமாக, உத்தரப் பிரதேச அரசு தொடக்கத்திலிருந்தே, நீதியின் குரலை முடக்க முயன்றது. குற்றம் சாட்டப்பட்ட சிறப்புக்குரிய நபரைப் பாதுகாக்க உ.பி. அரசு முயல்கிறது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் மிகுந்த மனவலியிலும், வேதனையிலும் உள்ளனர். அனைத்துக் குடும்பங்களுக்கும் நீதி வேண்டும். ஆனால், மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியில் மிஸ்ரா இருப்பதால், விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

லக்கிம்பூர் வன்முறை வழக்கு விசாரணையின் தற்போதைய சூழல் குடும்பங்களின் அச்சம் சரியானது என்பதை நிரூபிக்கிறது. மத்திய அமைச்சர் மிஸ்ராவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் இணைந்து பங்கேற்றுள்ளார்கள்''.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in