

5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தமைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் கடந்த ஓராண்டாகப் போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக இன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டங்கள் வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு பஞ்சாப், கோவா, உ.பி. உள்ளிட்ட 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்காகவே இந்த வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு பல மாநிலங்களில் இருந்ததால்தான் மக்களின் அதிருப்தியைச் சமாளிக்கும் பொருட்டு இந்த நகர்வை பிரதமர் மோடி எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஆனால், 5 மாநிலத் தேர்தலுக்கும், பிரதமர் மோடியின் அறிவிப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
''3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது குறித்து பிரதமர் மோடியின் அறிவிப்புக்கும், 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. விவசாயிகள் இதேபோன்று போராட்டம் நடத்திய காலத்தில் நடந்த இடைத் தேர்தலில்கூட பாஜக பல மாநிலங்களில் வென்றுள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது மக்கள் மத்தியில் அரசின் மீதான நம்பகத்தன்மையை வளர்க்கும். இந்தச் சட்டங்கள் மீது இன்னும் அதிகமான விவாதங்கள் தேவை என்பதால் திரும்பப் பெறப்படுகின்றன. விவசாயிகள் மீது பிரதமர் மோடி வைத்திருக்கும் அக்கறையின் விளைவுதான் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன. விவசாயிகளின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
தாராள மயமாக்கல், உலக மயமாக்கல் கடந்த 1991-92ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதன் ஒருபகுதியாகத்தான் இந்த 3 சட்டங்களும் உள்ளன. அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உலக வர்த்தக அமைப்பிடம் ஒப்பந்தமும் செய்துள்ளது.
இதில் நாங்கள் பணிந்துவிட்டோம் என்ற கேள்வியே இல்லை. தாராள மயமாக்கல், உலக மயமாக்கல் ஆரம்பித்தபோதே இந்தச் சட்டங்களும் வந்துவிட்டன. இதேபோன்று பல சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேளாண் சீர்திருத்தங்கள், வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் இவற்றின் ஒரு பகுதிதான்''.
இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பாஜக தனது தவறை உணர்ந்துவிட்டது. வேளாண்மைக்கு எதிரான 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தின்போது உயிர்த் தியாகம் செய்த விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டிய நேரம். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தாருக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். இறுதியாக விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.