திரிபுராவில் மசூதிகள் சேதப்படுத்தப்படவில்லை: வதந்தி பரப்புவதாக மத்திய அரசு விளக்கம்

திரிபுராவில் மசூதிகள் சேதப்படுத்தப்படவில்லை: வதந்தி பரப்புவதாக மத்திய அரசு விளக்கம்
Updated on
1 min read

"திரிபுராவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக கலவரம் நடைபெற்றதாகவும், மசூதிகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பரவும் தகவல்களில் உண்மையில்லை. இது வெறும் வதந்திதான்" என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வங்கதேசத்தில் அண்மையில் துர்கா பூஜை பண்டிகை அன்று, இந்துக்கள் மீதும், இந்துக் கோயில்கள் மீதும் ஒரு தரப்பினர் கடும் தாக்குதல் நடத்தினர். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் சிலர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவமானது அண்டை நாடான இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், வங்கதேச கலவரத்தை கண்டித்து பாஜக ஆளும் திரிபுராவில் பல இந்து அமைப்புகள் சார்பில் கடந்த வாரம் பேரணிகளும், போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மசூதிகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. மேலும், திரிபுராவில் இருதரப்பு மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதாக சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. எனினும், அம்மாநில அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இதனிடையே, திரிபுராவில் மசூதிகள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மகாராஷ்டிராவில் பல மாவட்டங்களில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் அந்தப் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திரிபுராவில் எந்தப் பகுதியிலும் கலவரம் நடைபெறவில்லை. மசூதிகளும் சேதப்படுத்தப் படவில்லை. இதுதொடர்பான பொய் செய்திகளும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதனை மக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், திரிபுராவில் கலவரம் நடைபெற்றதாக கருதி, மகாராஷ் டிராவில் சில வன்முறை சம்பவங் கள் அரங்கேறி யிருக்கின்றன. இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. எந்த சூழலிலும், சட்டம் - ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. மக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக திரிபுராவில் கலவரம் நடந்ததாக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பியதாக நூற்றுக் கும் மேற்பட்டோர் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனடியாக நீக்குமாறு பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு காவல் துறை நோட்டீஸும் பிறப்பி்த்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in