டெல்லியில் குடியரசு தின டிராக்டர் பேரணி; கைதான 83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டை அருகே டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் | கோப்புப்படம்
குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டை அருகே டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் | கோப்புப்படம்
Updated on
2 min read

டெல்லியில் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள், வேளாண் அமைப்புகள், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த குடியரசு தினத்தின்போது, விவசாயிகள் டிராக்டரில் டெல்லிக்குள் ஊர்வலமாக வரவும், பேரணி நடத்தவும் டெல்லி போலீஸார் அனுமதியளித்தனர். விவசாயிகள்பேரணி தொடக்கத்தில் அமைதியாக இருந்த நிலையில் திடீரென டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

இதில் டெல்லி செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள் அமைப்பினர் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில் தங்களின் கொடியை ஏற்றினர். விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று தீர்க்கமாக உள்ளனர். ஆனால், மத்திய அரசுத் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசு நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டு மேலும் எரியும் தீயில் நெய் வார்த்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு எதிர்த்துவரும் நிலையில், குடியரசு தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான 83 விவசாயிகளுக்கு இழப்பீட்டை அறிவித்துள்ளது காங்கிரஸ் அரசு.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எனது அரசு இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்கிறேன். கடந்த ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடந்த பேரணியில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட 83 விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in