

புதுடெல்லி: அசாம், மேற்கு வங்கம், ஹரியாணா, இமாச்சல பிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுகக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக ஆளும் ஹரியாணா, இமாச்சல பிரதேச மாநில இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. இது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுகுறித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிகைத் கூறியதாவது:
நாட்டு மக்களை அடக்கி ஒடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்று வருகிறது. சர்வாதிகாரத்தை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதனை சரிசெய்ய அவர்களுக்கு நேரமில்லை.
இதனால் பாஜகவை நாட்டு மக்கள் நிராகரிக்க தொடங்கவிட்டனர். அதற்கான முன்னோட்டம் தான் இந்த இடைத்தேர்தல் முடிவு. ஹரியாணா, இமாச்சல பிரதேசத்தில் பாஜக அடைந்திருக்கும் தோல்வி, எங்களுக்கு (விவசாயிகள்) கிடைத்த வெற்றி ஆகும். இனி பாஜகவுக்கு என்றும் தோல்வி முகம் தான். இவ்வாறு அவர் கூறினார்.