

வரும் 26ம் தேதிக்குள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் இல்லாவிட்டால், டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் மீண்டும்தீவிரப்படுத்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைத் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுகளை மத்திய அரசு நடத்தியும் எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதி்த்து இடைக்கால உத்தரவு பிறப்பி்த்துள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்த வருகிறது. டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியாக போராட்டம் நடத்த விவசாயிகள் தரப்பில் சமீபத்தில் அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் சம்மதம் தர மறுத்துவிட்டது.
வரும் 26-ம் தேதியுடன் விவசாயிகள் டெல்லியின் புறநகரான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைகிறது. விவசாயிகள் தரப்பில் சம்யுக்தா கிசான் மோர்சசா, பிகேயு ஆகிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பிகேயு அமைப்பின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திக்கைத் ட்விட்டரில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அதில் “ மத்திய அரசுக்கு வரும் 26ம் தேதி வரை காலக்கெடு விதிக்கிறோம்.
அதற்குள் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நவம்பர் 27-ம் தேதி முதல் விவசாயிகள் டெல்லியைச் சுற்றியுள்ள எல்லையை கிராமங்களில் இருந்து டிராக்டர் மூலம் அடைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவார்கள். தற்காலிக தங்குமிடங்கள் கோட்டைகள் போன்று வலுப்படுத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.