

அரசியல் கட்சிகளுக்குள் உட்கட்சித் தேர்தல் நடத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஜனநாயக விதிகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப இன்று உத்தரவிட்டுள்ளது.
ராஜசேகர் என்பவர் இந்தப் பொதுநல மனுவை வழக்கறிஞர் அபிமன்யு திவாரி, சுர்ச்சி சிங் ஆகியோர் மூலம் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இயல்பாகவே நிலப்பிரபுத்துவம் மற்றும் சுயநலம் இருக்கிறது. இதனால் கட்சிக்குள் முறையான ஜனநாயக அமைப்பு முறை இல்லை. அரசியல் கட்சிகளுக்குள் உட்கட்சித் தேர்தல் நடத்தும்போது, அதில் கடைப்பிடிக்க வேண்டிய ஜனநாயக நெறிமுறைகள் இல்லை.
ஆதலால், பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உட்கட்சித் தேர்தல் நடத்தும்போது ஜனநாயக முறைப்படி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க போதுமான ஒழுங்குமுறை இல்லை. உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும்போது அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஜனநாயக விதிகளை வகுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
உட்கட்சித் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்ய வெளியிலிருந்து தேர்தல் பார்வையாளர்களையும், கண்காணிப்பாளர்களையும் நியமிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி டி.என்.பாட்டீல், ஜோதி சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஏற்கெனவே மனுதாரர் இதேபோன்ற மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கவேண்டும் எனத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.