

இந்திய விளையாட்டு ரசிகர்கள் கால்பந்தாட்டத்தை நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, இதற்கு இந்தியாவில் நடைபெறும் ஃபிபா அண்டர்-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றார்.
‘மன் கி பாத்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் நாட்டு மக்களுக்காக வானொலி உரை நிகழ்த்தி வருகிறார், இதன் படி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அவரது மன் கி பாத் வானொலி உரை இடம்பெற்று வருகிறது.
இந்த உரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. ஆனால் நிபந்தனை என்னவெனில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக பேசக்கூடாது. இதனால் உலகக் கோப்பை கால்பந்து, விளையாட்டு என்று பிரதமர் தனது பேச்சை வரையறுத்துக் கொண்டார்.
இந்நிலையில் இன்று பிரதமரின் 18-வது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அதில் பிரதமர் பேசியதாவது:
உலகம் முழுதும் கிறித்துவர்கள் ஈஸ்தர் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர், அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இளம் நண்பர்களே, உங்கள் பள்ளித் தேர்வுகளில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருப்பீர்கள், சிலருக்கு இன்று கூடுதல் பரிட்சையும் உள்ளது, அதுதான் இந்தியா-ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டி. நான் இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டில் ஹாக்கி, கால்பந்து உட்பட பிற விளையாட்டுகள் மீதான ஆர்வம் பெருகி வருகிறது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் போல் நமது கால்பந்து ரசிகர்கள் கால்பந்தாட்டத்தை ரசித்து மகிழ்கின்றனர். கால்பந்தாட்டத்தை ஒவ்வொரு கிராமத்திற்கும் எடுத்து செல்வது அவசியம், இதற்கு ஃபிபா அண்டர்-17 கால்பந்து ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்.
கால்பந்து மீது புத்துயிர் பெற்ற மோகம் இப்போது இருந்து வருகிறது. ஆனால் ஃபிபா அண்டர் 17 கால்பந்து தொடரை நாம் நடத்துவதுடன் திருப்தி அடைந்து விட முடியுமா? அல்லது நாம் இன்னும் மேலே ஏதாவது செய்ய வேண்டுமா? கால்பந்தாட்டத்தை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
எனவே இந்த உலகக்கோப்பைப் போட்டி கால்பந்தாட்டத்தின் மீதான ஈர்ப்பை வலுப்பெறச் செய்து இளைஞர்களை இதன் பக்கம் திருப்பவல்லது. இந்த உலகக்கோப்பையை நடத்துவதன் மூலம் நமக்கு விளையாட்டுத்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே, இந்த அண்டர் 17 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு நாட்டின் இளைஞர்கள் அனைவருமே விளம்பரத்தூதராகச் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அன்பான மாணவர்களே, தேர்வுகள் முடிந்த பிறகு நீங்கள் விடுமுறை மற்றும் பயணத்திட்டங்கள் குறித்து சிந்திப்பீர்கள். நீங்கள் பயணம் மேற்கொண்டு வெறும் புகைப்படங்களை மட்டும் எடுப்பதோடு முடித்து விடாதீர்கள். அதைப் பற்றி ஏதாவது எழுதுங்கள்.
வகுப்பறையும், நண்பர்கள் வட்டமும் கற்றுத்தராத விஷயங்களை பயணம் கற்றுக் கொடுக்கும். இந்திய இளைஞர்கள் புதிய இடங்களுக்குச் செல்லும் சாகச மனப்பான்மையுடன் திகழ்கின்றனர்.
நண்பர்களே விடுமுறைகள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. எனவே அதனை அப்படியே போக விட்டு விடாமல் ஏதாவது திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். விடுமுறை தினங்களில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயத்துடன் மீண்டும் வகுப்பறைக்குச் சென்று நண்பர்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு மகிழ்ச்சி தரும் அனுபவம்!!
கோடை காலம் அனைவருக்கும் ஓய்வு எடுக்க வேண்டிய காலமாக இருக்கும் வேளையில் நம் விவசாயிகள் வயல்களில் பாடுபட வேண்டியுள்ளது, பிறகு நல் விளைச்சலுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. விவசாயத்தைக் கருத்தில் கொண்டு நாம் நீரைச் சேமிக்க வேண்டும். நாட்டின் நீராதாரங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன, எனவே பாதுகாப்பதன் அவசியத்தை அனைவரும் உணருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.