

72-வது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து விருது பெறும் மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். படங்கள்: பிடிஐ
ஏக்தா (குஜராத்): 72-வது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளை திரைக்கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்திய திரைப்படத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று குஜராத்தின் ஏக்தா நகரில் (முன்பு கெவாட்டியா என்று அழைக்கப்பட்டது) மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தேசிய திரைப்பட விருது விழாக்கள் இதுவரை டெல்லி விக்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த தேசிய விருதுகள் விழாவை, நாட்டின் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய முடிவின்படி, முதன்முறையாக டெல்லிக்கு வெளியே குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடத்தப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று, 2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தமிழில் 2024-ல் வெளியான அமரன் படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதை குடியரசு தலைவரிடம் இருந்து ஜி.வி. பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சிறந்த தமிழ்ப்படம் என்ற வகையில் தேர்வான ராயன் திரைப்படத்தை இயக்கியதற்காக நடிகர் தனுஷ் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.
2024-ம் ஆண்டின் தேசிய சிறந்த நடிகருக்கான விருது 2 பேருக்கு வழங்கப்பட்டது. மலையாளப் படமான பிரம்மயுகம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் மம்மூட்டி பெற்றுக் கொண்டார். இந்திப் படமான சந்து சாம்பியன் படத்தில் நடித்ததற்காக கார்த்திக் ஆர்யனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த தேசிய நடிகைக்கான விருதை ஆர்ட்டிக்கிள் 370 படத்துக்காக யாமி கவுதம் பெற்றுக்கொண்டார். மேலும், கேப்டன் மில்லர் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகர் (சிறப்புப் பிரிவு) விருது தனுஷுக்கு வழங்கப்பட்டது.
அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும், ஒட்டுமொத்த பொழுதுபோக்கு படமாகத் தேர்வான கல்கி 2898 ஏடி படத்துக்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் விருது வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான விருது சஞ்சஸ் மிர்ஸாவுக்கும் (படம்: பக்சக்), துணை நடிகைகளுக்கான விருது ரூபஸ்ரீ வர்கடிக்கும் (மித்யா), சச்சனா நமிதாஸுக்கும் (தமிழ் திரைப்படம் மகாராஜா ) வழங்கப்பட்டது.
சிறந்த அறிமுக இயக்குநர் விருது ரந்தீப் ஹூடாவுக்கு (ஸ்வதந்தர வீர சாவர்க்கர்) வழங்கப்பட்டது. தேசிய, சமூக மதிப்புகளை உயர்த்திய படமாகத் தேர்வு செய்யப்பட்ட கேப்டன் மில்லர் படத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. சிறந்த இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சஷ்வத் சச்சேவுக்கு (ஆர்ட்டிகிள் 370, கல்கி 2898 ஏடி படங்கள்) விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஆர்ட்டிகிள் 370 படத்துக்கான விருதை இயக்குநர் ஆதித்யா தார் பெற்றுக்கொண்டார். சிறந்த திரைக்கதைக்கான விருதுகளை சுகுமார் (புஷ்பா-2), யோகேஷ் தேஷ்பாண்டே (ஸ்வர்கந்தர்வ சுதர் பாட்கே) ஆகியோருக்கும், சிறந்த வசனத்துக்கு வெங்கி அட்லூரிக்கும் (லக்கி பாஸ்கர்), சிறந்த ஒளிப்பதிவாளருக்கு ஷெனாத் ஜலாலுக்கும் (பிரம்மயுகம்), சிறந்த புரொக்சன் டிசைனுக்கான விருதை நிதின் ஜிஹானி சவுத்ரி (கல்கி 2898 ஏடி) உள்ளிட்டோருக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கி கவுரவித்தார்.
சென்னையில்... தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாக்கள் வழக்கமாகவே டெல்லியில்தான் நடைபெறும். 1954-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், 1971-ம் ஆண்டு மட்டும் 17-வது தேசிய திரைப்பட விருது விழா தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு முதன்முறையாக டெல்லியை விட்டு குஜராத்தின் ஏக்தா நகரில் தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மம்மூட்டிக்கு 4-வது தேசிய விருது: மலையாள நடிகர் மம்மூட்டி 4-வது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இதற்கு முன்பு அவர் ஒரு வடக்கன் வீர கதா, மதிலுகள் படங்களுக்காக முதல் முறையும் (1990), விதேயன், பொந்தன் மாடா (1994) படங்களுக்காக 2-வது முறையும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் (1999) படத்துக்காக 3-வது முறையும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தார். தற்போது 4-வது தேசிய விருதை பிரம்மயுகம் படத்துக்காக பெற்றுள்ளார்.