

மதுரை: மதுரைக்கு செப்டம்பர் 28-ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் விஜய், 17 ஆண்டுகளுக்குப் பின்பு குடமுழுக்கு விழா நடந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த 17-ம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதையடுத்து, செப்.18 முதல் அக்.2-ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடக்க விழா செப். 28-ம் தேதி உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்தது. திடீரென இடம்மாற்றப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதே தேதியில் நடைபெறுகிறது.
இதன் காரணமாக, மதுரைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் விஜய், மீனாட்சி அம்மன் கோயிலிலும் தரிசனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.எனவே, முதல்வரை வரவேற்கும் வகையில், கோயில் நிர்வாகம், காவல் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து தவெகவினர் கூறுகையில், ‘மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவின்போது. முதல்வர் லண்டன் பயணம் மேற்கொண்டதால், அவரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில், செப். 28-ம் தேதி மதுரைக்கு வரும்போது, மீனாட்சி அம்மன் கோயிலிலும் தரிசனம் செய்ய உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, அவரை வரவேற்க நாங்களும் தயாராகி வருகிறோம்’ என்றனர்.
முதன்முறையாக வருகை: ‘முதல்வரான பிறகு முதன்முறையாக மதுரைக்கு வருவதால், விமான நிலையத்தில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனை வரை முதல்வர் வரும் வழித்தடம் உள்ளிட்ட நகருக்குள் அளிக்கும் பாதுகாப்பு குறித்து, காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
மேலும் அவர், மீனாட்சி அம்மன் கோயிலிலும் தரிசனம் செய்வதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க உள்ளூர், வெளியூர்களில் இருந்து போலீஸாரை வரவழைக்க திட்டமிட்டுள்ளோம். முதல்வர் வருகைக்கான அதிகாரப்பூர்வ தகவல் டிஜிபி அலுவலகத்தில் இருந்து வந்த பின்பு, மீனாட்சி அம்மன் கோயிலில் முழுப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.