

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மோதுவது தேச நலனுக்கு எதிரானது என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இரு அணிகளும் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் மீண்டும் மோதுகின்றன என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், டி20 மற்றும் 50 ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாறு தொடர்வதால் இன்றைய ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்தியா வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறித் தாக்குல் நடத்துவது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடக்கும்போது, இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவது சரியா என அரசியல் தலைவர்கள் பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி ஆகியோர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நாக்பூர் விமானநிலையத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று அளித்த பேட்டியில் “ போதை மருந்துக்கு பாலிவுட் சிக்கியிருப்பது இந்தியாவின் எதிர்காலத் தலைமுறையினருக்கு பெரும் ஆபத்தாகும். சினிமா நடிகர்கள், நடிகைகள், பிரபலமானவர்களை ரோல் மாடலாக இளைஞர்கள் நினைத்து செயல்படுகிறார்கள். ஆனால், இதுபோன்ற வழக்குகளில் பிரபலங்கள் சிக்குவது மக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.
இந்தியா ,பாகிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டிகள் இன்றைய சூழலுக்கு நடத்தக்கூடாது. இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடக்கூடாது, அவ்வாறு விளையாடுவது தேசதர்மம் அல்ல. அதாவது இது தேச நலனுக்கு எதிரானது. கிரிக்கெட் விளையாட்டும், தீவிரவாத விளையாட்டும் ஒரே நேரத்தில் நாம் விளையாடக்கூடாது.
கருப்பு பணத்தை மீட்பதன் மூலம் எரிபொருள் விலை குறையும் எனத் தெரிவித்தேன் அதன் அர்த்தம் என்பது விலையை ஒழுங்குபடுத்தி,வரியைக் குறைக்க வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை தேச நலனுக்காகவே செய்து வருகிறது. பல்வேறு வகையான நிதிச்சிக்கல்களைச் சந்திக்கிறது. இதனால்தான் அரசால், வரியைக் குறைக்க முடியவில்லை. ஆனால், நிச்சயமாக இந்தக் கனவு நிறைவேறும்.
இவ்வாறு ராம்தேவ் தெரிவித்தார்