

மக்கள் இடையூறாக அவர்கள் பயன்படுத்தும் சாலையை மறித்துப் போராட்டம் நடத்தக்கூடாது என்று விவசாயிகள் சார்பில் தொடர்ந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்்ந்து கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகப் போாரட்டம் நடத்தி வருகிறார்கள்
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் 200 விவசாயிகள் சத்யாகிரஹப் போராட்டம் நடத்தப் போகிறோம். அதற்கு அனுமதி வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி விவசாயிகள் மற்றும் வேளாண்ஆர்வலர்கள் அமைப்பான கிசான் மகாபஞ்சாயத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்எஸ் கவுல் தலைமையில் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. விவசாயிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன் ஆஜராகினர். ஹரியாணா அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.
விவசாயிகள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் வாதிடுகையில் “ விவசாயிகள் போராட்டம் செய்யத் தொடங்கியதும் வேண்டுமென்றே மக்களின் அதிருப்தியை விவசாயிகள் பக்கம் திருப்ப அரசுதான் தடைகளை சாலைகளை உருவாக்குகிறது. ஆதலால், ராம் லீலா மைதானத்திலும், ஜந்தர் மந்தரிலும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்புத் தெரிவித்து, “ கடந்த ஆண்டு சுதந்திரத்தன்று நடந்த வன்முறை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். ஏராளமானோர் காயமைடைந்தனர், பலர் கொல்லப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி கவுல் அமர்வு “ விவசாயிகள் போராட்டம் நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது.நாங்கள் எந்த பிரச்சினையையும் ஏற்கவும் தயாரில்லை. கடந்த 2 ஆண்டுகளாக அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடக்கும் பிரச்சினைக்குதீர்வு தேவை.
இந்த நீதிமன்றம் ஏற்கெனவே ஷாகீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கிலேயே கூறிவிட்டது. போாரட்டம் நடத்த உரிமை இருக்கிறது, ஆனால், மக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமையை பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கூறிவிட்டதால், மீண்டும் மீண்டும் அதைக் கூற எந்தக் காரணமும் இல்லை. அதேநேரம் சில தீர்வுகளும் தேவை, சாலைகளை மறித்து போராடக்கூடாது” எனத் தெரிவித்தார்
வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடுகையில் “ போராடுவது அடிப்படை உரிமை, சாலைகளை மூடுவது போலீஸார் செயல். போராட்டக்காரர்கள்தான் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்று அரசு கூறுகிறது. ஏன் ஜந்தர் மந்தரில் விவசாயிகளை அனுமதிக்க மறுக்கிறீர்கள்.
ஆளும் பாஜக நேற்று வங்கதேச அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஜந்தர் மந்தரில் நாங்கள் போராட்டம் நடத்த அனுமதிப்பது மட்டும்தான்” எனத் தெரிவி்த்தார்
துஷார் மேத்தா கூறுகைியல் “ கடந்த முறை இதேபோன்று அனுமதி கேட்டு போராட்டம் நடத்தி தீவிரமான பிரச்சினையானது” எனத் தெரிவித்தார்.
அதற்கு துஷ்யந்த் தவே பதில் அளிக்கையில் “ வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கானது இல்லை என்று கருதுகிறார்கள். அது வேறுயாருடைய நலனுக்காக உருவானது. விவசாயிகளுக்கு எதிராக குற்றம்சாட்டினால், நாங்கள் உங்களுக்கு எதிராக குற்றம்சாட்டுவோம். ஒரே தீர்வு ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளை போராட்டம் நடத்த அனுமதிப்பதுதான்” என்றார்
அதற்கு துஷார் மேத்தா, “ ராம்லீலா மைதானம், ஜந்தர் மந்தர் பகுதியில் ஏராளமான மக்கள் குடியிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே விவசாயிகள் தொடர்ந்த மனுவின் விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.