

விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறேன். விவசாயிகள் நலன் கருதி அவர்களின் போராட்டத்துக்கு தீர்வு கண்டால் அடுத்துவரும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டு வைக்கவும் தயாராக இருப்பதாக பஞ்சாப் முன்னாள் முதல்வரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும், மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை காங்கிரஸ் மேலிடம்நியமித்தது.
அதைத் தொடர்ந்து சில நாட்களில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் விலகினார். காங்கிரஸ் கட்சியுடன் கருத்துவேறுபாடு காரணமாக எந்தத் தொடர்பும் இன்றி இருக்கிறார், இன்னும் கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகவில்லை.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கிய அமரிந்தர் சிங் கடந்த மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி சென்று சந்தித்தார். இதுஅரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியது. பாஜகவில் அமரிந்தர் சேரப்போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால், பஞ்சாப் எல்லைப் பிரச்சினை குறித்து அமித் ஷாவுடன் அமரிந்தர் சிங் பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சூழலில் அடுத்துவரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டு வைக்கவும் அமிரந்தர் சிங் தயாராகிவிட்டார் என்பது தெரியவந்துள்ளது. அரசியல் வாழ்க்கை முழுவதும் பாஜகவுக்கு எதிரானநிலைப்பாடு எடுத்து அரசியல்செய்த அமரிந்தர் சிங் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமரிந்தர் சிங் நேற்று கூறியதாக அவரின் ஊடக ஆலோசகர் ரவீண் தக்ருல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. பஞ்சாப்புக்கும், மாநில மக்களுக்கும் சேவை செய்யவும், கடந்த ஓர் ஆண்டாக போராடிவரும் விவசாயிகள் நலனுக்காகவும் விரைவில் நான்(அமரிந்தர்சிங்) புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறேன்.
எங்களுடைய சிந்தனைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் ஒத்துவரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி சேர்வோம். சிரோன்மணி அகாலி தளமும் எங்களுடன் கூட்டணியில் சேரலாம். என்னுடைய மாநிலத்துக்கும், மக்களுக்கும் நல்ல பாதுகாப்பான எதிர்காலம் அமையும்வரை ஓயமாட்டேன்.
விவசாயிகள் நலனுக்காக அவர்களின் போராட்டத்துக்கு சுமூகமான முடிவை பாஜக எடுத்தால், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டு வைக்கவும் தயார். பஞ்சாப் மாநிலத்துக்கு அரசியல் நிலைத்தன்மை தேவை.
வெளியிலிருந்தும், மாநிலத்துக்கு உள்ளேயிருந்தும் வரும் அச்சுறுத்தல்களில் இருந்து மக்களுக்கு பாதுகாப்புத் தேவை. மாநிலத்தில் அமைதியும், பாதுகாப்பும் நிலைத்திருக்க தேவையானவற்றை செய்வேன் என எனது மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.