

பஞ்சாப் விவசாயிகளை மனமுடைய வைக்காதீர்கள், பஞ்சாபை நிலைகுலையச் செய்தால் என்னாகும் என்பதை ஏற்கெனவே ஒருமுறை நாடு பார்த்துள்ளது என்று மத்திய அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கு எல்லையில் வெள்ளிக்கிழமை ஒரு தலித் விவசாயி கொடூரமாக கொல்லப்பட்டதைக் கண்டித்து பவார் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி – ஹரியாணா எல்லையான சிங்குவில் கடந்த 10 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வெள்ளியன்று விவசாயிகளின் போராட்டக் களத்துக்கு அருகில் சாலைத் தடுப்பு ஒன்றில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்தது.
அந்த நபர் பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சீமா குர்த் கிராமத்தில் வசிக்கும் லாக்பீர் சிங் என அடையாளம் காணப்பட்டார். இறந்தவர், சுமார் 35-36 வயதுடையவர், அவர் கூலி வேலை செய்து வந்தவர் என்றும் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் இல்லை என்றும் அவர் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை என்று போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது.
புனே நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் (என்சிபி) தலைவர் சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து கூறியதாவது:
விவசாயப் போராட்ட களத்தில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளை மத்திய அரசு மனமுடைய வைக்கக்கூடாது, பஞ்சாப் நமது எல்லை மாநிலமாக உள்ளது. நடந்து வரும் போராட்டத்தில், பெரும்பான்மையான விவசாயிகள் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள்.
எல்லையில் உள்ள மாநிலங்களை நாம் நிலைகுலைய செய்தால், அதன் பின்விளைவு என்ன, என்பதை முன்பு ஒருமுறை நாடு பார்த்துள்ளது. நாடு அதற்கு ஏற்கெனவே மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளது.
அந்த விலை இந்திரா காந்தியின் கொலையுடன் சம்பந்நதப்பட்டது என்பது நினைவிருக்கட்டும். எனவே பஞ்சாப் விவசாயிகளை மனமுடைய வைக்காதீர்கள், எல்லை மாநிலத்தை நிலைகுலையச் செய்யாதீர்கள்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.