

அப்சல்குரு மரண தண்டனை குறித்த விவாதம் சட்டரீதியானதே. ஏனெனில் அவர் ஒரு இந்தியக் குடிமகன் என்று புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கண்ணய்யா குமார் தெரிவித்தார்.
மேலும் தான் அரசியல்வாதியல்ல என்றும் அரசியலில் ஈடுபடும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ இல்லை, நான் ஒரு மாணவன் என்றும், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள கண்ணய்யா குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:
நான் அரசியல்வாதி அல்ல, மாணவன். தேசிய அரசியலில் இணையும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ இல்லை. ஒரு மாணவனாக கேள்வி கேட்கவும், எதிர்காலத்தில் ஓர் ஆசிரியனாக பதிலளிக்கவும் விரும்புகிறேன். எனவே, எனது அரசியல் இலக்கு குறித்த கேள்வியை ஒதுக்கிவிடலாம்.
நாட்டு மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, பல்கலைக்கழக மாணவர்கள்தான் வாக்களித்தனர். நான் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அல்ல; ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர். நான் மாணவர்களைப் பற்றியும், அவர்களுக்காகவும் மட்டுமே பேசுவேன்.
என்னைப் பொறுத்தவரையில் சட்டப்படி தண்டிக்கப்பட்ட அப்சல் குரு இந்நாட்டின் குடிமகன். அளிக்கப்பட்ட தண்டனை சரியா, தவறா என யார் வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அதற்கு சட்டம் அனுமதிக்கிறது.
அப்சல் குரு எனது வழிபாட்டுக்கு உரியவர் அல்ல. ரோஹித் வெமுலாதான் என் வணக்கத்துக்குரியவர்.
எனது வேலை, படிப்பதும், படிப்பதற்கு ஆசைப்பட்டு முடியாமல் போகிறவர்களுக்காகப் போராடுவதும்தான். இது ஒரு நீண்ட காலப் போராட்டம் என்பதால் வெற்றிப் பேரணி என்பது உடனடி சாத்தியம் அல்ல, ஆனால், ஒற்றுமைப் பேரணி இருக்கும்.
வரி செலுத்துவோரின் பணம் பல்கலைக்கழகத்தை நடத்துவதற்காக வீணடிக்கப்படுகிறது என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. மக்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். வரியாகச் செலுத்தப்படும் பணம் சரியான இடத்தில் முதலீடு செய்யப்படுகிறது. ஏபிவிபி-யால் பரப்புரை செய்யப்படும் அகண்ட பாரதம் என்ற தேசியவாதக் கருத்தாக்கத்திற்கு எதிரானவன் நான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.