

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிப்பு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக, கார்கள், சிகரெட், பிராண்டட் துணிகள், விமான கட்டணம் ஆகியவை அதிகரிக்கும். அதேநேரம், காலணிகள், சோலார் மின்விளக்குகள் விலை குறையும்.
அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், அனைத்து சேவைகளுக்கும் வேளாண்மை மற்றும் கிராம பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்புக்காக கூடுதல் செஸ் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உணவுப்பொருள்கள் மற்றும் பல்வேறு சேவை கட்டணங்கள் அதிகரிக்கும்.
குறிப்பாக, ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களுக்கு கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய கார்களுக்கும் 1 சதவீதம் உள்கட்டமைப்பு (இன்ப்ரா) செஸ் விதிக்கப்படும். டீசல் கார்களுக்கு 2.5 சதவீத உள்கட்டமைப்பு செஸ் விதிக்கப்படும். கனரக பயணிகள் வாகனங்கள் மற்றும் சொகுசு வாகனங்களுக்கு (எஸ்யுவி) 4 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.
புகையிலை பொருட் களுக்கான (பீடி தவிர) கலால் வரி 10-லிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படும். இதனால் சிகரெட் விலை உயரும். தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு 1 சதவீம் கலால் வரி விதிக்கப்படும். குளிர்பானங்கள் (கோக், பெப்சி), மினரல் வாட்டர் விலை 3 சதவீதம் அதிகரிக்கும். ஓட்டல், விமான பயணம் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளுக்கு கட்டணம் அதிகரிக்கும். ரூ.1,000-க்கு மேற்பட்ட பிராண்டட் துணிகள் விலை அதிகரிக்கும்.