பிரியங்காவைச் சந்திக்க அனுமதி மறுப்பு: லக்னோ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்ணா

பிரியங்காவைச் சந்திக்க அனுமதி மறுப்பு: லக்னோ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்ணா
Updated on
2 min read

உ.பி.யில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்திக்க லக்னோவுக்கு வந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தான் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். அவர்கள் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமல் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 28 மணி நேரமாக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது சிஆர்பிசி 151 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூருக்குச் செல்வேன் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

பிரியங்கா கைது செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பிரியங்காவைச் சந்திக்க உ.பி.க்குச் செல்லப்போவதாக நேற்று அறிவித்தார். இதனை அறிந்த உ.பி. அரசு, சத்தீஸ்கர் முதல்வர் வந்த விமானத்தை லக்னோவில் தரையிறங்க அனுமதி அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியது. எனினும் உ.பி. அரசின் உத்தரவை மீறி பூபேஷ் பாகல் லக்னோவுக்கு வந்து சேர்ந்தார்.

பூபேஷ் பாகல் பிரியங்காவைச் சந்திக்க சித்தாபூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் இன்று காலை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். சித்தாப்பூரில் தடுப்புக் காவலில் உள்ள பிரியங்கா காந்தியைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், ''உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியைச் சந்திக்க லக்னோ வந்தேன். ஆனால், எந்தவித உத்தரவுமின்றி, விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்படவில்லை. அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன்'' என்று பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in