

நாட்டின் விவசாயிகள், ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கும் உரிமை இல்லை என பாஜக மூத்த தலைவர் உமா பாரதி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
லக்கிம்பூர் கெரியில் நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பிரியங்கா காந்தி கடந்த 28 மணி நேரமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது இதுவரை எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.
ஆனால், விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்திய அமைச்சரின் மகன் மட்டும் சுதந்திரமாக வெளியே நடமாடுகிறார். அவரை ஏன் கைது செய்யவில்லை என்றும், லக்னோ வரும் பிரதமர் மோடி, லக்கிம்பூர் கெரிக்கும் வந்து விவசாயிகள் குடும்பத்தாரைச் சந்திக்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி ட்விட்டரில் பிரியங்கா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “ உத்தரப் பிரதேச காங்கிரஸுக்குப் பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும், நீங்கள் பேசிவரும் விஷயத்தைப் பேசுவதற்கு உரிமையில்லை.
சுதந்திரத்துக்குப் பின் விவசாயமும், விவசாயிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மகாத்மா காந்தியின் கனவான நாட்டின் முக்கியப் பொருளாதாரமான வேளாண் தொழில், பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் அழிக்கப்பட்டது.
நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவந்த காங்கிரஸ் கட்சி, ஜனநாயகம் என்ற வார்த்தையை உச்சரிக்க உரிமையை இழந்துவிட்டது. 10 ஆயிரம் சீக்கியர்களை உயிரோடு எரித்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அஹிம்சையைப் பற்றிப் பேசுவது பொருத்தமானது அல்ல.
காங்கிரஸ் கட்சியினர், தலைவர்கள் நேர்மறையான எண்ணத்தை உருவாக்கி, வளர்த்துக் கொண்டு, மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டு, விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்''.
இவ்வாறு உமா பாரதி தெரிவித்துள்ளார்.