வேளாண் சட்டங்களுக்குத் தடை விதித்தபின் எதற்காகப் போராடுகிறீர்கள்?- விவசாயிகள் அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுவிட்டது. சட்டங்கள் நடைமுறையில் இல்லாத நிலையில், எதற்காகப் போராடுகிறீர்கள் என்று விவசாயிகள் அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து கடந்த ஓராண்டாகப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் ஓராண்டு நினைவாகக் கடந்த மாதத்தில் பாரத் பந்த்தை விவவசாயிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் 200 விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப் போகிறோம். அதற்கு அனுமதி வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி விவசாயிகள் மற்றும் வேளாண் ஆர்வலர்கள் அமைப்பான கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இரு நாட்களுக்கு முன் வந்தபோது, நீதிபதிகள் அமர்வு, விவசாயிகள் நடத்த இருக்கும் சத்தியாகிரகப் போராட்டத்தையும், அதற்கு அனுமதி கேட்டதையும் கடுமையாகச் சாடியது.

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் அமர்வு, மனுதாரர் வழக்கறிஞரிடம், “வேளாண் சட்டங்கள் தொடர்பாக, அது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா எனக் கோரி ஒரு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை அணுகிவிட்டனர். இந்தச் சூழலில் நீங்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி என்ன செய்யப் போகிறீர்கள். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுவிட்டது. சட்டங்கள் நடைமுறையில் இல்லாத நிலையில், எதற்காகப் போராடுகிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பியது.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், உ.பி. லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தையும், அதில் ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு, “லக்கிம்பூர் கெரி வன்முறையில் இதுவரை ஒருவர் கூட பொறுப்பேற்கவில்லையா” எனக் கேட்டது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, நீதிபதிகள் அமர்விடம், “ஒரு விவகாரம் நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பிடம் கொண்டுசெல்லப்பட்டுவிட்டால், யாரும் அது தொடர்பாக சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தை வரும் 21-ம் தேதி நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in