

டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் போராட்டம் என்ற பெயரில் ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? என விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 300 நாட்களுக்கும் மேலாக தொடரும் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி- ஹரியாணா, டெல்லி - உத்தரபிரதேசம் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நொய்டாவைச் சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் எனஅனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும்" என அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம். சுந்தரேசன் தலைமையிலான அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு மற்றும் மத்திய அரசு தரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண பல வழிமுறைகள் இருக்கின்றன. போராட்டத்தின் மூலமாகவோ, நாடாளுமன்ற விவாதங்கள் மூலமாகவோ பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். ஆனால், போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? எப்போது இந்த மறியல் முடிவுக்கு வரும்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களால் உத்தரவுகளை தான் பிறப்பிக்க முடியும். அவற்றை செயல்படுத்துவது அரசின் கையில் தான் இருக்கிறது. இனியும் இந்த பிரச்சினை தொடரக் கூடாது. இந்த வழக்கில் விவசாயசங்கங்களை பிரதிவாதிகளாக சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு வரும் 4-ம்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.-பிடிஐ