Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

43 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பங்கின் இன்றைய மதிப்பு ரூ.1,448 கோடி: பணம் தர மறுப்பதாக செபியிடம் முதலீட்டாளர் புகார்

முதலீட்டாளர் ஒருவர் 43 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நிறுவன பங்குகளின் இன்றைய மதிப்பு ரூ.1,448 கோடியாகும். ஆனால் அதற்குரிய தொகையை தர நிறுவனம் மறுப்பதால் செபியிடம் புகார் செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வந்த மேவார் ஆயில் அண்ட் ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தராக, பாபு ஜார்ஜ் வாளவி (74) 1970-முதல் 1980-ம் ஆண்டு வரை இருந்தார். 1978-ம் ஆண்டு வாளவி தனதுகுடும்பத்தினர் 4 பேருடன் சேர்ந்துஅந்நிறுவனத்தின் 3,500 பங்குகளை வாங்கியுள்ளனர். இது நிறுவனத்தின் பங்குகளில் 2.8% ஆகும்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் பி.பி. சிங்காலுடனான நட்பின்அடிப்படையில் பங்குகளை வாங்கியுள்ளார். அப்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம் ஆதலால் பங்குகளுக்குஎவ்வித ஈவுத் தொகையும் (டிவிடெண்ட்) வழங்கப்படவில்லை. நாளடைவில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததையே குடும்பத்தினர் மறந்துவிட்டனர்.

2015-ம் ஆண்டு வீட்டில் உள்ளபழைய பொருள்களை அப்புறப்படுத்த முயன்றபோது அந்த பங்கு பத்திரங்கள் கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் உண்மை நிலவரத்தை அறியும் முயற்சியில் வாளவி ஈடுபட்டார். அப்போதுதான் மேவார் ஆயில் அண்ட் ஜெனரல் மில்ஸ்நிறுவனத்தின் பெயர் பிஐ இண்டஸ்ட்ரீஸ் என மாற்றப்பட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு மிகச் சிறப்பாக செயல்படுவது தெரியவந்தது.

தன்னிடம் உள்ள பங்குகளை டி-மேட் ஆக (மின்னணு பங்குகளாக) மாற்ற முடியாததால், பிஐ நிறுவனத்தை அணுகினார். அப்போது 1989-ம் ஆண்டே அவர் வசம் இருந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தனது பங்குகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள வாளவி, சட்ட ரீதியாக அணுகும் முயற்சியில் ஈடுபட்டார். பிரச்சினை சிக்கலாவதை உணர்ந்த நிறுவனம் 2016-ல், வாளவியை டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

தன் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு, இப்போது உள்ள பிஐ இண்டஸ்ட்ரீஸின் 42.8 லட்சம் பங்குகளுக்கு இணையானது என வாளவி குறிப்பிட்டுள்ளார். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.1,448 கோடியாகும்.

1989-ம் ஆண்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்கள் அனைவருமே குடும்ப உறுப்பினர்கள். நிறுவன செயல் அதிகாரி ஜிசிஜெயின் பங்கு பரிமாற்ற நடவடிக்கையை எடுத்துள்ளார். இவர் பங்குகளை தனது நெருங்கிய உறவினர்களுக்கு போலி ஆவணங்களை தயார் செய்து மாற்றியுள்ளார் என்று வாளவி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை அமைப்பிடம் (செபி) வாளவி புகார் செய்துள்ளார். ஆனால் இது தொடர்பாக எவ்வித தகவலையும் செபி கோரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x