முதல் தவணை கரோனா தடுப்பூசி 96.6 சதவீதம் உயிரிழப்பை தடுக்கும்: மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தகவல்

முதல் தவணை கரோனா தடுப்பூசி 96.6 சதவீதம் உயிரிழப்பை தடுக்கும்: மத்திய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தகவல்
Updated on
1 min read

மத்திய நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் டெல்லியில் நேற்று கூறியதாவது:

கரோனா வைரஸுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி. அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கரோனா 2-வது அலையின் போது அதிக உயிரிழப்புகள் நேரிட்டன. பெரும்பாலும் தடுப்பூசி போடாதவர்களே உயிரிழந்தனர்.

முதல் தவணை கரோனா தடுப்பூசி 96.6 சதவீதம் அளவுக்கும் இருதவணை தடுப்பூசி 97.5 சதவீதம்அளவுக்கும் உயிரிழப்பை தடுக்கிறது. இது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து கிடையாது. மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசிய மும் இருக்காது.

உத்தர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கரோனாவுக்கு எதிராக போரிடுவது போன்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு எதிராகவும் போரிடுவது அவசியம்.

பள்ளி மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போட்ட பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. உலகின் எந்தவொரு நாட்டிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனினும் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், பெற்றோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

18% பேருக்கு 2 தவணை

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 58 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 18 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசியையும் போட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட கரோனா தொற்றில் 68.59 சதவீதம் கேரளாவில் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in