

ஹரியாணா மாநிலத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 2 நாட்களுக்கு முன்பாக கர்னால் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தடையை மீறியதால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி போலீஸாரிடம் கர்னால் மாவட்ட துணைக் கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்ஹா உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது: போராட்டம் நடத்திய விவசாயிகளின் மண்டையை உடைக்குமாறு அதிகாரி கூறிய வார்த்தைகள் தவறானதுதான். அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.
அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், முதலில் மாவட்ட நிர்வாகத்தின் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து போலீஸ் டிஜிபி விசாரித்து வருகிறார். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற கண்டிப்பான நடவடிக்கைகள் தேவைதான். முதல்வர் ஒரு இடத்துக்கு வரும் போது அவரை அனுமதிக்க மாட்டோம் என்று சிலர் கூறினால் சரியாகுமா? இவ்வாறு கட்டார் கூறினார்.