

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வயல்களை மண்ணாக்க அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லியின் புறநகரில் உள்ள பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 12 சுற்றுப் பேச்சு மத்தியஅரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நடந்தும் எந்தத்தீர்வும் எட்டவில்லை.
விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக கேரளா, பஞ்சாப், ஹரியாணாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிராக்டர் பேரணியும் நடத்தினார்.
கடந்த பிப்ரவரி மாதம் வயநாட்டில் பேசிய ராகுல் காந்தி “ இந்திய விவசாயிகள் படும் துயரங்களை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வருகிறது. ஆனால், டெல்லியில் உள்ள மத்திய அரசால் விவசாயிகளின் வேதனையை புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகள் குறித்து யாரேனும் குரல் கொடுத்தாலும் அதை மத்திய அரசு விரும்பவில்லை.
இந்த புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் முறையை அழிக்கும் சட்டங்களாகும், இந்திய விவசாயத்தின் மூலம் உருவான ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் சில நண்பர்களுக்காக நரேந்திர மோடி வழங்கியுள்ளார்” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களை மணலாக மாறவிடக்கூடாது, தங்களின் நண்பர்களுக்காக இந்த வயல்களை வழங்க அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், #ஃபார்மர்ஸ்ப்ரோடெஸ்ட் எனும் ஹேஸ்டேகையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.