

குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கோரக்பூர் மருத்துவர் கஃபீல்கான் மீதான குற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவி்ட்டுள்ளது.
2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடும் வகையில் மருத்துவர் கஃபீல்கான் பேசியதாகக் குற்றம் சாட்டி, அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உ.பி. அரசு கைது செய்தது.
இதனால் 2020-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்ட கஃபீல்கான், அலிகர் அழைத்து வரப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் மீது தொடக்கத்தில் ஐபிசி 153ஏ பிரிவில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்பின் ஐபிசி 153 பி மற்றும் 505 (2) ,109 ஆகியவை சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அலிகர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், 13-ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கஃபீல்கானை உ.பி. அரசு கைது செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் கஃபீல்கான் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவை கஃபீல்கானின் தாய் நுஷ்ரத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மருத்துவர் கஃபீல்கானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது செல்லாது எனக் கூறி ரத்து செய்து அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது எனக் கூறித் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் மருத்துவர் கஃபீல்கான் மீதான குற்றப்பத்திரிகையைக் கடந்த ஆண்டு மார்ச்சில் அலிகர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீஸார் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையைச் சந்திக்கக் கோரி கஃபீல்கானுக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், சிஆர்பிசி 482 பிரிவின் கீழ் தன் மீதான குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கஃபீல்கான் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ''தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் முன் மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகியவற்றிடம் முறையாக போலீஸார் அனுமதி பெறவில்லை.
ஐபிசி 153-ஏ, 153-பி,505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் முன் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று போலீஸார் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவேண்டும். ஆனால் போலீஸார் இந்த அனுமதியைப் பெறவில்லை என்பதால், தன் மீதான குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கவுதம் சவுத்ரி முன்னிலையில் நேற்று விசாரிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கவுதம் சவுத்ரி, “சிஆர்பிசி 196(ஏ) பிரிவின் கீழ் ஐபிசி 153-ஏ, 153-பி,505 (2) ஆகிய பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் முன் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாமல் போலீஸார் குற்றச்சாட்டுகளை கஃபீல்கானுக்கு எதிராகப் பதிவு செய்து அலிகார் மாஜிஸ்திரேட்டிடம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
முறையாக குற்ற நடவடிக்கைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்பதால் இதை ரத்து செய்கிறோம். மாநில அரசின் அனுமதி பெற்று, முறையான வழியில் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்” என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கஃபீல்கான் கூறுகையில், “இந்திய மக்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி, நீதித்துறையின் மீதான நம்பிக்கை நிலைநாட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மக்களை எவ்வாறு யோகி ஆதித்யநாத் அரசு நடத்துகிறது என்பதை மதிப்புக்குரிய அலகாபாத் உயர் நீதிமன்றம் முழுமையாக வெளிப்படுத்திவிட்டது. இந்தத் துணிச்சலான தீர்ப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவான அனைத்து மக்களுக்கும், ஆர்வலர்களுக்கும், நாட்டின் சிறையில் உள்ள அனைவரும் நம்பிக்கையளிக்கும் என நம்புகிறேன். இந்திய ஜனநாயகம் நீண்ட காலம் வாழ வேண்டும்” எனத் தெரிவித்தார்.