

டெல்லியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் 9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, நீதி கிடைக்கத் துணை இருப்போம் என உறுதியளித்து வந்தார். அப்போது அந்தச் சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
போக்சோ சட்டப்படி, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அந்தச் சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ சட்டப்படி குற்றமாகும்.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ட்விட்டர் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதி, ராகுல் காந்தி, போக்சோ விதிமுறைகளை மீறிவிட்டதால், ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியும், தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தையும் நீக்கினார்.
இந்நிலையில் மகரந்த் சுரேஷ் மத்லேகர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அதில், “பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்தது விதிமுறை மீறல். போக்சோ சட்டம் மற்றும் சிறுவர்களுக்கான நீதிச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம்.
இந்தச் சம்பவத்தை அரசியல் லாபத்துக்காக ராகுல் பயன்படுத்தியுள்ளார் என்பதால் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பிலும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல், ஜோதி சிங் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. ட்விட்டர் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சஜன் பூவையாவும், ராகுல் காந்தி தரப்பில் வழக்கறிஞர் ஆர்எஸ் சீமாவும் ஆஜராகினர்.
அப்போது ட்விட்டர் நிறுவன வழக்கறிஞர் சஜயன் கூறுகையில், “ராகுல் காந்தி ட்வி்ட்டரில் பதிவிட்ட கருத்தும், புகைப்படமும் நீக்கப்பட்டுவிட்டது. ட்விட்டர் கணக்கையும் லாக் செய்துள்ளோம். ட்விட்டர் நிறுவனத்தின் விதிகள் மீறப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “நீதிமன்றம் தலையிடாமலேயே அந்தப் புகைப்படத்தை நீக்கிவிட்டார்கள். ஆதலால் நம்பிக்கையற்று இருக்க எந்தக் காரணமும் இல்லை. ஆதலால், ராகுல் காந்தி தரப்புக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட முடியாது. வரும் செப்டம்பர் 27-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.