என்ஐஏ கேள்விகளுக்கு ஹெட்லியின் மனைவி பதில்

என்ஐஏ கேள்விகளுக்கு ஹெட்லியின் மனைவி பதில்
Updated on
1 min read

26/11 மும்பை தாக்குதல் பின்னணியில் உள்ள சதித்திட்டம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அனுப்பிய கேள்விகளுக்கு மொராக்கோவில் உள்ள டேவிட் ஹெட்லியின் மனைவி ஃபைசா ஒத்தல்ஹா பதில் அளித்துள்ளார்.

மும்பை மற்றும் டென்மார்க்கில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியதற்காக அமெரிக்காவில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹெட்லி, தற்போது சிகாகோ நகர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் ஹெட்லியை விட்டுப் பிரிந்து, தற்போது மொராக்கோவில் வசித்து வரும் அவரது முதல் மனைவி ஃபைசா ஒத்தல்ஹா என்ஐஏ கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் வசித்த ஹெட்லியை ஒத்தல்ஹா 2007 பிப்ரவரியில் திருமணம் செய்துள்ளார். ஓராண்டுக்குப் பிறகு ஹெட்லியை விவாகரத்து செய்துள்ளார். மும்பை தாக்குதல் தொடர்பாக மட்டுமின்றி ஹெட்லியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஒத்தல்ஹா கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ஒத்தல்ஹா 2 முறை மும்பை வந்துள்ளார். மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு ஹெட்லி வேவு பார்த்தபோது, இதற்கு ஒத்தல்ஹாவை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

ஒத்தல்ஹா பாகிஸ்தானில் இருந்தபோது, லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீதை சந்தித்துள்ளார். அப்போது ஹெட்லி தனது பணத்தை அபகரித்துக்கொண்டதாகவும் தன்னிடம் மோசமாக நடந்துகொள்வதாகவும் புகார் செய்துள்ளார். மேலும் ஹெட்லிக்கு லஷ்கர் இ தொய்பா, ஹர்கத் உல் ஹிகாதி இஸ்லாமி ஆகிய அமைப்புகளுடன் உள்ள தொடர்பு குறித்து இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் புகார் அளித்துள்ளார்.

ஃபைசா ஒத்தல்ஹா தவிர, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹெட்லியின் வீடியோ பார்லரில் பணியாற்றிய ஹெட்லியின் உறவினரும் என்ஐஏ கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

“ஹெட்லி இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். வீடியோ பார்லரில் பணியாற்ற அவருக்கு விருப்பம் இல்லை” என்று உறவினர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in