Published : 05 Aug 2021 02:10 PM
Last Updated : 05 Aug 2021 02:10 PM
கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற சூழலில் இருக்கும் 18 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை அல்லது காப்பாளர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு 18 வயதுவரை ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் மூலம் செயல்படுத்தப்பட்டு அதற்கான காப்பீடு தொகை பிஎம். கேர்ஸ் நிதி மூலம் செலுத்தப்படும்.
கரோனாவால் பெற்றோரை அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைக்கு 18 வயது வரை மாத உதவித்தொகையும், 23 வயது அடையும்போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்
பிஎம் கேர்ஸில் குழந்தைகளுக்கான நலத்திட்டம் கடந்த மே 29-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், கரோனாவில் தாய், தந்தை இருவரையும் இழந்த அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காக்கும் திட்டமாகும். இந்த திட்டம் 2020, மார்ச் 11-ம் தேதி முன்தேதியிட்டு தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல்நலன், மனநலம், கல்விச்சூழல் ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்கவும், 23 வயது அடையும்போது வாழ்க்கையை நடத்த உதவித்தொகையும் வழங்குவதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT