

மேகேதாட்டு அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ளது. அதேபோல, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
பாஜக ஆட்சிக்கு முன்பு 2014-ம் ஆண்டு வரை 189 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 215 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இருந்தன. தற்போது 289 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 269 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது. பட்ட மேற்படிப்பு மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பாஜக தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அதிகரித்துள்ளது.
மேகேதாட்டு அணை விவசாயிகளின் பிரச்சினையாகும். அதை ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்காது என்றார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி
இதேபோன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் - திமுக ஆட்சி செய்தபோது, தமிழகத்துக்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவரப்படவில்லை. ஆனால், ஓராண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்துக்கு பிரதமர் அளித்துள்ளார். இதன் மூலமாக தமிழகம் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்டவராக அவர் இருப்பது தெரிய வருகிறது.
கர்நாடகாவில் இருந்து வழிந்தோடிய நீர் மட்டுமே தமிழகம் வந்த நிலையில், மோடி பிரதமராக பதவியேற்ற பிறகுதான் தமிழகத்தின் உரிமை நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒருபோதும் அரசியல் லாபத்துக்காக ஒரு மாநில உரிமையை பறித்து மற்றொரு மாநிலத்துக்கு மத்திய அரசு அளிக்காது. மேகேதாட்டு அணை வருவதற்கு வாய்ப்பே இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டும், திமுகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
காவிரி விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள போராட்டம், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் போராட்டமாக அமையும். தெற்கில் உள்ள நதிகள் இணைக்கப்படும்போது, தமிழகத்தின் ஒட்டுமொத்த நீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்றார்.