

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் காவல் துறையினர் 7 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தனர்.
ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கின் விசாரணை அதிகாரியான அயோத்தி நகரக் காவல் நிலைய ஆய்வாளர் அசுதோஷ் திவாரி, சுமார் 7,000 பக்கக் குற்றப்பத்திரிகையை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நான்கு பெட்டிகள் மற்றும் ஒரு அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதில் அறக்கட்டளை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், சிசிடிவி இயக்குபவர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உட்பட 173 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம் பெற்றுள்ளன. திருட்டு சம்பவம் 105 முறை நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 803 பொருட்கள் திருட்டு தொடர்பான சிசிடிவி பதிவுகள் துல்லியமாக இருப்பது கண்டறியப்பட்டது.
86 மதிப்புமிக்க பொருட்கள் பெறப்பட்டதற்கான விவரம் கிடைக்கப்பெறவில்லை. பணம் எண்ணும் அறையில் முறைகேடு நிகழ்ந்ததுடன் விதிமுறைகள் மீறப்பட்டது தெரியவந்துள்ளது. பணம் எண்ணும் அறைக்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய ஊழியர்கள் முறையாக சோதனையிடப்படவில்லை. பணம் எண்ணும் நேரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.
மாற்று உண்டியல்களின் சாவிகள், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி முறைசாரா முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. சிசிடிவி காட்சிப் பதிவுகள், நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விடக் குறைவான காலத்துக்கே உள்நோக்கத்துடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 2026-ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கார், நகைகள் மற்றும் ரூ.79.85 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.