

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் கூறியதாவது:
தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 8.2 சதவீதமாக கணித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே இந்தியாவின் வளர்ச்சிக்கான கணிப்பை ஐஎம்எப் வெளியிட்டுவிட்டது. நடப்பு நிதியாண்டைப் பொருத்தவரையில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். இது, அக்டோபரில் ஐஎம்எப் கணித்த 6.6 சதவீதத்தை விட அதிகம்.
இந்தியாவால் 20 ஆண்டுகளுக்கு 8 சதவீதத்திற்கு நெருக்கமான வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ள முடிந்தால் 2047 இலக்குகளை அடையமுடியும். ஆனால், 20 ஆண்டு காலத்திற்கு தொடர்ச்சியாக 8 சதவீத வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்குத் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் தேவைப்படும். இவ்வாறு கீதா கோபிநாத் கூறினார்.